“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
மாநில அரசுகள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு செயல்படுத்தாதது பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறு செயல் அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;
“தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம், “தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற எந்தவொரு கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இக்கருத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்று வரவேற்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்கிட வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.