Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் தீவிர விசாரணை!

09:49 PM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 16) கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

Advertisement

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார்.

இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் கடந்த 5-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.

இதனிடையே, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிஐடி மற்றும் வாங்கல் வழக்குகளில் தாக்கல் செய்திருந்த தலா இரு முன் ஜாமீன் மனுக்கள் கடந்த 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 7-ம் தேதி கரூர் பெரியாண்டாங்கோவில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவர்களது நெசவு தறிக்கூடம், பெட்ரோல் பங்க், எம்ஆர்வி அறக்கட்டளை, உறவினர் வீடு, சென்னையில் உள்ள அவரது வீடு என 6 இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 11ம் தேதி ஆண்டாங்கோவில் அம்மன் நகரில் உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கவினில் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த பசுபதி செந்தில் உள்ளிட்ட 14 பேரிடம் கடந்த 11-ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் இன்று (ஜூலை 16) கைது செய்தனர். அவரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் விசாரணை நீண்ட நிலையில், தற்போது மருத்துவ பரிசோதனைக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

Tags :
ADMKarrestedCBCID PoliceFormer MinsterKeralaMR Vijayabaskarnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article