அடுத்த போப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கத்தோலிக்க திருச்சபையார் - 2வது நாளாக தொடரும் கான்க்ளேவ் மாநாடு!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது. 88) கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த மே.07 ஆம் தேதி புதிய போப் யார்? என்பதை தேர்வு செய்யக்கூடிய மிகவும் ரகசியமான கான்க்ளேவ் என்ற வாக்கெடுப்பு மாநாடு தொடங்கப்பட்டது. இதில் 133 கார்டினல்களும் வாக்களித்து அடுத்த போப்பை தேர்வு செய்வார்கள். இதற்காக அனைத்து கார்டினல்களும் ஏற்கெனவே ரோம் நகருக்கு சென்று, தற்போது கான்க்ளேவ் மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.
கான்க்ளேவ் மாநாட்டை முன்னிட்டு வாடிகனில் செல்போன் சிக்னல்கள் செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிஸ்டைன் சேப்பலைச் சுற்றி சிக்னல் ஜாமர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கான்க்ளேவ் மாநாட்டில் பங்கேற்றுள்ள கார்டினல்கள் தங்கள் மொபைல்களை கொண்டு வர தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து கான்க்ளேவ் மாநாடு இரண்டாவது நாளாக இன்று(மே.08) நடந்து வரும் நிலையில், உலககெங்கும் உள்ள கத்தோலிக்க திருச்சபையினர் தங்களது அடுத்த போப் யாரென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றும் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைக் குறிக்கும் வகையில் சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்து கரும்புகை வெளியிடப்பட்டது. வெண் புகை வெளியானால் அடுத்த போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம்.