சனீஸ்வர பகவான் ஆலய பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க ரிஷப வாகனத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கொடிமரத்தில் கொடியை ஏற்றினர்.
அதனை தொடர்ந்து கொடி மரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் இளநீர் விபூதி போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், பூஜிக்கப்பட்ட புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு
மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் மாவட்ட ஆட்சியர் சோமா சேகர் அப்பாராவ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 6ஆம் தேதி ஐந்து ரத தேர்களான நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், செண்பக தியாராஜர் சுவாமி, ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி திருதேரோட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து 7ஆம் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 8ம் தேதி தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.