உண்டியல் பணத்தில் ‘புயல் நிவாரணம்’ அளித்த சிறுவர்கள்... வீடியோ பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சி!
‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது சேமிப்பு பணத்திலிருந்து பிஸ்கட், மெழுகுவர்த்தி என வாங்கிக்கொடுத்த சிறுவர்கள். சு.வெங்கடேசன் எம்.பி. நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள். மழையால் பதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஏழாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு முறையே படிக்கும் இரண்டு சிறுவர்கள் தனது சேமிப்பு பணமாக இருந்த ரூ.450-ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிஸ்கட், மெழுகுவர்த்தி வாங்கி கொடுத்ததாக பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ஏழாம் வகுப்பு படிக்கும் ஆதீதனும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜீவானந்தமும் தங்கள் சேமிப்பு உண்டியலை உடைத்து அதிலிருந்த 450 ரூபாயிலிருந்து தாம்பரத்தில் வெள்ளம் பாதித்தப் பகுதி குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், மெழுகுவர்த்திகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தனர். குழந்தைகளை அரவணைத்து மகிழ்ந்தேன்.” இவ்வாறு பகிர்ந்துள்ளார்.