ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! மீட்புப் பணிகள் தீவிரம்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் மயூர் என்ற 6 வயது ஆண் குழந்தை, நேற்று மாலை, குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து மற்ற சிறுவர்கள், மயூரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ரேவா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறுகையில், "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். பனாரஸில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ஆழ் துளை கிணற்றில் குழந்தை எவ்வளவு ஆழத்தில் சிக்கியுள்ளது என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம்" என்றார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.