முடிவானது பாஜக - தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!
“மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்” என ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.
மேலும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதே போல பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அவர் தெரிவித்ததாவது..
மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும். பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாக முடிவு செய்துள்ளது.
இவ்வாறு ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார்.