“நிதி தாமதமாவதால் திட்டங்கள் மக்களை சென்றடைய தாமதமாகிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஆலோனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"திட்டங்களை எந்த பாகுபாடும் இல்லாமல் அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்று எந்த பாகுபாடு கிடையாது. மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி பயனாளிக்கு போய் சேருவதில் மாநில அரசின் பங்கை உணர்ந்துள்ளோம். மத்திய அரசின் நிதி கிடைப்பதில் தாமதம் உள்ளதாலேயே, திட்டத்தின் பலன் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம் உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை ரூ2,118 கோடி மத்திய அரசு தர வேண்டி உள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2023-24ம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களை விட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியுள்ளோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மத்திய அரசால் ஊதியம் அளிக்கப்படவில்லை. நிதியை விடுவிக்க அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி. கனிமொழி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. 2021-22 வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3,43,959 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.