முதன்முறையாக ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் சவூதி அரேபியா!
மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முறையாக பங்கேற்கிறது. அந்த நாட்டின் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி தேர்வாகியுள்ளார்.
சவூதி அரேபியாவை சேர்ந்த 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபிய நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுதின் ஆட்சியின் கீழ் தங்களது பாரம்பரிய வழக்கத்தை கைவிடும் நகர்வில் ஒன்றாகவும், பழமைவாத நாடு என்ற பிம்பத்தைக் குறைக்க பட்டத்து இளவரசர் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
உலக அளவில் நடைபெற்று வரும் அழகிப் போட்டிகளில் ரூமி அல்கஹ்தானி பங்கேற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போட்டியில் பங்கேற்று இருந்தார். உள்நாட்டு அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ரியாத்தில் பிறந்த இவர் தன் நாட்டின் சார்பில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். அவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் 10 லட்சம் பேர் மற்றும் எக்ஸ் தளத்தில் ஆயிரக்கணக்கானவர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர். மிஸ் யுனிவர்ஸ் 2023-ம் ஆண்டுக்கான பட்டத்தை நிகரகுவாவின் ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரேபிய தீபகற்பத்தில் மிகப்பெரிய தேசமான சவூதி அரேபியா, பாரம்பரியமாக கடுமையான மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை பராமரித்து வருகிறது. இறுக்கமான சட்டங்கள், கட்டுப்பாடுகள் நிறைந்தபோதும், காலமாற்றங்களுக்கு ஏற்ப அவசியமான தளர்வுகளையும் கண்டு வருகிறது.