இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - படக்குழு அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப்.
கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது.
சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மேலும் நிகழ்ச்சியின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.