தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் - 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!
தேனி மாவட்டம், பி.சி.பட்டி அருகே கோடாங்கிப்பட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கூலித்தொழிலாளி பாண்டியன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஐந்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த சுகுமாரன், கபில், சேவாக், அஜித் மற்றும் சந்திரகுமார் ஆகியோர் மது போதையில் அப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர். இவர்களின் அராஜகத்தை அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும், பாண்டியனை சரமாரியாகத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தினர். படுகாயமடைந்த பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தேனி பி.சி.பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது.
இறுதி விசாரணையின் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன், சுகுமாரன், கபில், சேவாக், அஜித் மற்றும் சந்திரகுமார் ஆகிய ஐந்து பேரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
மேலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட பாண்டியனின் குடும்பத்திற்கு இந்தத் தீர்ப்பு ஒருவித நீதியை வழங்கியுள்ளதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.