விஷ பாம்புகளுடன் பார்ட்டி செய்த விவகாரம்; காவல்நிலையத்தில் ஆஜரான யூடியூபர் எல்விஷ்...
விஷ பாம்புகளுடன் பார்ட்டி செய்த விவகாரம் தொடர்பான வழக்கில், யூடியூபர், எல்விஷ் யாதவ் காவல்நிலையத்தில் ஆஜரானார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா செக்டார் 49 பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாம்பு விஷம் கடத்தும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகளின் விஷத்தை போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்டனர்.
அதே நேரத்தில், நொய்டாவின் செக்டர் 49 காவல் நிலையத்தில் யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, விசாரணையின் போது, இந்த கடத்தல்காரர்கள் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவின் பெயரை கூறியுள்ளனர். அதன் பிறகு போலீசார் எல்விஷின் பெயரையும் வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த முழு விஷயத்திலும் எல்விஷ் யாதவின் தொடர்பு குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட போது, கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பையில் மொத்தம் 9 பாம்புகள் இருந்தன. அதில் 5 நாகப்பாம்புகள், 1 மலைப்பாம்பு ஆகியவை அடங்கும். இதனுடன் பிளாஸ்டிக் பாட்டிலில் 25 மில்லி லிட்டர் பாம்பு விஷமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகவலின்படி, நொய்டாவில் ரேவ் பார்ட்டியை ஏற்பாடு செய்ததாக எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யூடியூபர் பார்ட்டியில் தடை செய்யப்பட்ட பாம்புகள் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் பார்ட்டி இருந்ததாக கூறப்படுகிறது.
10 கிராம் பாம்பு விஷத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகம் எனக் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் பாம்பு விஷத்தின் விலை பல கோடியாக உள்ளது. அந்த கும்பல் எங்கிருந்து பாம்புகளை சப்ளை செய்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தான் எல்விஷ் யாதவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், மது விருந்துகளில் பாம்பு விஷத்தினை பயன்படுத்திய வழக்கில் யூடியூபர், எல்விஷ் யாதவ் காவல்நிலையத்தில் ஆஜரானார். இதற்கிடையில், ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் சப்ளை செய்யப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லை என்று எல்விஷ் மறுத்துள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, நவம்பர் 4-ஆம் தேதி விடியோ வெளியிட்டார்.
அந்த விடியோவில், "மேனகா காந்தியின் என்ஜிஓ அமைப்பு (பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்) இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாக அறிந்தேன். நான் கழுத்தில் பாம்புகளுடன் சுற்றித் திரிந்ததாக அவர் கூறியிருக்கிறார். அதெல்லாம் படப்பிடிப்புக்காகத்தான் கழுத்தில் போட்டிருந்தேன். இந்த வழக்கில் எனக்கு ஒரு சதவிகிதம் தொடர்பு இருந்தால் கூட 10 ஆண்டுகள் அல்லது 100 ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும், நானே சரணடைவேன்."என்று அவர் தெரிவித்திருந்தார்.
எல்விஷ் யாதவ் பாஜக ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அதே கட்சியைச்
சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தியின் அமைப்பே இவர் மீது குற்றம்
சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.