“கேப்டனுக்கு செய்ய வேண்டிய மரியாதையை நிச்சயம் நடிகர் சங்கம் செய்யும்” - நடிகர் சூரி
மறைந்த தேமுதிக தலைவர் 'கேப்டன்' விஜயகாந்த்-ன் இல்லத்திற்கு நடிகர் சூரி நேரில் சென்று, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு பொதுமக்கள் மட்டுமல்லாது, இறுதி ஊர்வலத்திற்கு வர முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து தற்போது அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். அந்த வகையில், தற்போது நடிகர் சூரி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் குடும்பத்திற்கும் தனது ஆறுதலை அவர் கூறினார். பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி, “கேப்டன் அவர்களைப் பற்றி அவர் செய்த பல நல்ல விஷயங்களையும் எல்லோரும் கூறிவிட்டனர். அவரைப் பற்றி நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
நான் படப்பிடிப்பில் அப்போது இருந்ததால் வர முடியவில்லை. அங்கு முறைப்படி அவருக்கு நாங்கள் அஞ்சலி செலுத்தினோம். சினிமாவில் எப்படி நல்ல மனிதராக பல கதாபாத்திரங்கள் செய்தோரோ, நிஜத்திலும் அப்படி வாழ்ந்துவிட்டு போய்விட்டார். வாழ்ந்தா இவர் போல வாழ வேண்டும் எனப் பதிவு செய்துவிட்டார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் கேப்டனின் ’தவசி’, ‘பெரியண்ணா’ போன்ற படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. காலம் முழுவதும் மக்கள் மனதில் கேப்டன் பெயர் நிச்சயம் இருக்கும். கேப்டனுக்கு என்ன மரியாதை செய்ய வேண்டுமோ நிச்சயம் நடிகர் சங்கம் அதைச் செய்யும்” என்றார்.