அமெரிக்காவில் வெற்றிகரமாக நடந்த 22வது உலகத் தமிழ் இணைய மாநாடு!
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்த ஆண்டிற்கான 22வது மாநாடு டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஜூன் 14-16 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வப் பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்த் தொழில் முனைவோர், தமிழ்க் கணினியாளர்கள், நிரலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பதை தனது முதன்மையான நோக்கமாக இது கொண்டுள்ளது.
உலகில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இம்மன்றத்தின் சார்பில் ஆய்வரங்கம், கருத்தரங்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. 1999-ல் சென்னையில் நடைபெற்ற 2வது தமிழ் இணைய மாநாடு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சந்திராயன் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். இன்று அனைத்து பத்திரிக்கைகளும், சமூக ஊடகங்களும் யூனிகோடு தமிழ் எழுத்துருக்களில் இயங்குவதற்கு உத்தமம் போன்ற அமைப்புகள் பெரிய அளவில் பங்காற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.