சித்திரை திருநாளையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
சித்திரை முதல் நாளை ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு தரப்பினர் சித்திரை திருநாள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம் என அறிவித்தார். தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா அதனை ரத்து செய்து சித்திரை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.
இதனால், தமிழ்நாட்டில் சித்திரை 1ஆம் தேதியானது திமுக சார்பு வட்டாரத்தில் சித்திரை திருநாள் என்றும், அதிமுக சார்பு வட்டாரத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்தை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.