”தவெக தலைவர் விஜய் நாளைய தமிழகத்தின் முதலமைச்சராவார்” - செங்கோட்டையன் பேச்சு..!
கோவை விமான நிலையத்தில் தவெகவின் நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
”இன்று மக்கள் சக்தியாக இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளைய தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர்வார். மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கு எந்த சக்தியாலும் முடியாது. ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வந்தாலும் கூட அதை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக வந்துள்ளார்.
தமிழகத்தில் புனித ஆட்சியை கொண்டுவர துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நான் இடம்பெற்று இருக்கிறேன். இவர்களோடு சேர்ந்து என் உயிர் மூச்சு உள்ளவரை இருப்பேன். எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும், எல்லோருக்கும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என விஜய் மனித நேயத்தோடு அறிவித்திருக்கிறார்.
தற்பொழுது நடந்து கொண்டிருக்கிற இரண்டு ஆட்சி மாற்றப்பட வேண்டும். ஜெயலலிதா படத்தை வைத்திருக்கின்றீர்களே என கேட்டார்கள். இங்கே ஜனநாயகம் இருக்கிறது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை தெளிவாக சொன்னேன்.
திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் உருவாக்க எம்.ஜி. ஆர் வழியில், அம்மா வழியில், இன்று பயணிக்க இருக்கின்றோம். என்னை பொருத்தவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். எனக்கு பின்னால் மக்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. அதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கின்றனர். நான் என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டுவான்” என்றார்.