பெரியாரின் உருவப்படத்திற்கு தவெக தலைவர் #Vijay மலர்தூவி மரியாதை!
தவெக தலைவர் விஜய் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.க்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னையில் தனது கட்சியின் அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
"சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.