“தளபதி விஜய் நூலகம்” திட்டத்தை தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்!..
தாம்பரம் பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விஜய் விலையில்லா மருந்தகம்', 'விஜய் விழியகம்', 'விஜய் பயிலரங்கம்' உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் துவங்கி வைத்தனர். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாம்பரத்தில் துவங்கி வைத்தார். அதன் பின் பல்லாவரத்திலும் துவங்கி வைத்தார்.
தாம்பரத்தில் 300 புத்தகங்கள், பல்லாவரத்தில் 200 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது, அரசியல் தலைவர்கள், பெரியார், காமராஜர், அம்பேத்கர், அன்னை தெரசா, அப்துல்கலாம், நேதாஜி பற்றிய புத்தகங்கள், போட்டித்தேர்வு, சட்டம், அகராதி, சிறுகதைகள், பாரதியார் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமும் காலை 9 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும். நூலகத்தில் தலைவர்கள் எழுதிய வாசங்கள் எழுதப்பட்டு ஒட்டியுள்ளனர் அந்த வகையில் விஜய் எழுதிய "யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கோங்க." என ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருவதால் ரசிகர்களிடையே அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.