“தி கோட்” திரைப்படத்தை கொண்டாடிவரும் #ThalapathyVijay ரசிகர்கள்!
விஜய்யின் தி கோட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளின் முன் ரசிகர்கள் ஆரவாரமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று (செப். 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே கோட் படம் மற்ற மாநிலங்களில் திரையிடப்படுவதால், வழக்கம் போல் மற்ற மாநிலத்திற்கு அதிகாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியானதை விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை
தி கோட் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, மேலதாளத்துடன் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை
மதுரையில் 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உள்ள 50 ஸ்கிரீங்களில் கோட் திரைப்படம் வெளியானது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கடந்த வாரம் துவங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. விஜய்யின் ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டினர். திரையரங்கு முன்பாக மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட்டி தீர்த்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் விஜயா திரையரங்கத்தின் முன்பு ரசிகர்கள் வெடி வெடித்து தவெக பாடலை எல்இடி திரையில் ஒளிபரப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்கத்தின் வாயிலில் பேனர்கள் வைத்துள்ள நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் விஜய்யின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேல தாளத்துடன் பட்டாசுகள் வெடித்து, திரையரங்கு வாசல்களில் கட் அவுட்கள் வைத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 9 மணி காட்சிக்கு காலை 5 மணி முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிய ஆரம்பித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் வெடி வெடித்தும், பேனர்கள் வைத்து, பாடல் இசைத்து ஆட்டம் போட்டு கண்டு மகிழ்ந்தனர்.
கோட் திரைப்படத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. மேலும் இப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மற்றும் நாளை இரண்டு நாள்களுக்கு கோட் படத்தின் சிறப்புக் காட்சிகளை திரையிட வேண்டும் என்று படக்குழு, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.