தைப்பூச திருவிழா : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !
முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று (பிப்.10) முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன், தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது
அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" ! என்று குறிப்பிட்டுள்ளார்.