#ThailandFireAccident | ஆசிரியர்கள், மாணவர்கள் என 23 பேர் உயிரிழந்த சோகம் - ஓட்டுநர் கைது!
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து தீப்பற்றிய விபத்தில் 23 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பேருந்தின் ஒட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில், பாங்காக்கின் வடக்கு புகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாலைகளுக்கு நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்தது. தீ மிக வேகமாகப் பரவியதில் அதிலிருந்த 20 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் வெளியேற முடியாமல் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது,
“பாங்காக் புகர்ப் பகுதியில் ஏற்பட்ட பேருந்து தீவிபத்து தொடர்பாக, அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்ற சமன் சன்புத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாகனத்தை அலட்சியமாக ஓட்டிச் சென்றது, விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாக்க முயலாதது, விபத்து குறித்து தகவல் அளிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக பேருந்து நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : "நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை" - #ThirumavalavanMP பேச்சு!
அந்த பேருந்தில் ஆறு இயற்கை எரிவாயு கலன்களைப் பொருத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி 11 கலன்கள் பொருத்தப்பட்டிருந்தன. முன்பக்கத்தில் ஒரு டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலைத் தடுப்பில் மோதி உரசியதால் அந்த எரிவாயுக் கலன்கள் வெடித்ததாகத் தெரிகிறது. அந்தப் பேருந்தை ஓட்டுநர் அதிக வேகத்தில் இயக்காவிட்டாலும், கட்டுப்பாட்டை இழந்த உடனேயே அதை நிறுத்துவதற்கு அவர் தவறிவிட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர். விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்"
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.