தாய்லாந்து பெருவெள்ளம் ; 33 பேர் உயிரிழப்பு..!
தென் கிழக்கு ஆசிய நாடுகள் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழை பொழிவுக்கு ஆளாகி வருகின்றன. கடந்த வராங்களில் மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தொடர்மழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்லாந்தும் அப்பட்டியலில் இணைந்துள்ளது.
கடந்த வார இறுதியில் தெற்கு தாய்லாந்தில் கனமழை பொழிந்தது. இதனால் தெற்கு பகுதியில் உள்ள சோங்க்லா உள்ளிட்ட 7 மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சிரிபோங் அங்காசகுல்கியாட், ”தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 33 பேர் இறந்துள்ளனர். திடீர் வெள்ளம், மின்சாரம் தாக்குதல் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.