டெஸ்ட் கிரிக்கெட் | சுப்மன் கில் இரட்டை சதம்.. 587 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்தது.
கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மன் கில் - ரவீந்திர ஜடேஜா ஜோடி குவித்தனர். சிறப்பாக ஆடிய ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். சுந்தர் 42 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து இரட்டை சதமடித்து அதிரடி காட்டிய சுப்மன் கில் 269 ரன்களில் அவுட் ஆனார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டன் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். பின்னர் களமிறங்கிய ஆகாஷ் தீப் 6 ரன்களிலும், முகமது சிராஜ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் 151 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் மற்றும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.