தென்காசி : இறுதி ஊர்வலத்திற்கு செல்வதுபோல் சங்கு, கொல்லி சட்டி ஏந்தி வந்து மனு அளித்த பொதுமக்கள்!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்கபுரம், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட கிராம பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் இடுகாடு, குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒரு மனிதனுக்கு தனது இறுதி நாளில் தேவைப்படும் முக்கிய தேவையான இடுகாடாவது முதலில் எங்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறுதி ஊர்வலம் செல்வது போல் சங்கு ஊதி, கொல்லி சட்டி எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
தொடர்ந்து அவர்களை போலீசார் சற்று தொலைவில் மறித்து மனுவை மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் கொண்டு சென்று கொடுக்க அறிவுரை வழங்கிய நிலையில், அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இருந்தபோதும், தங்களுக்கு இடுகாடு வேண்டும் எனக்கூறி கிராம மக்கள் இறுதி
ஊர்வலத்திற்கு வருவது போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.