Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இபிஎஸ்-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு | தலைமை நீதிபதி முடிவு செய்வார்" - உச்சநீதிமன்றம்

12:55 PM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார்  குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பி வைத்து  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை,  கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில்,  ‘எடப்பாடி பழனிச்சாமி தனது நெருங்கிய நண்பர்களுக்கும்,  உறவினர்களுக்கும் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை ஒதுக்கியதன் மூலம் அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியையும்,  முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார்.  இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

அதன் பிறகு,  இதே புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்திருந்தார்.  இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.  இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து,  இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து,  இந்த வழக்கில் கடந்த ஜூலை 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீரப்பளித்து.  அதில்,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  மேலும், ஆர்.எஸ். பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார்.

அதில், ’புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும்,  சுய லாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.  இதனால், ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காண முடியாது.  ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால்,  அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ்,  பீலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார்,  மேலும் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் ஆஜரானார்.  ஆனால் வழக்கறிஞர் கபில் சிபில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இதே வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞராக ஆஜரானவர் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார் இதனை ஏற்க முடியாது என கூறப்பட்டது.

இந்நிலையில்,  வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி அமர்வு முன்பு இன்று (29.11.2023) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகினார்.  அவர், “இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை அனிருதா போஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.  அதன்படி இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஒரு அமர்வில் விசாரித்து வரும் வேளையில்,  வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவது என்பது பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் வழக்கை பட்டியலிடும் பதிவாளரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கை தற்போதைய அமர்வே விசாரிக்கலாம். கடந்த முறை கூடுதல் விசாரணை இல்லாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என நீதிபதி பீலா எம். திரிவேதி அறிவித்தார். மேலும் இது குறித்த தங்களது கோரிக்கைகளை தலைமை நீதிபதி முன்பு வைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Next Article