திருப்புவனம் சாலையில் சுற்றித் திரியும் கோயில் மாடுகளால் நிகழும் விபத்துகள்! கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதி!!
திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாடுகள் சாலைகளில் உலாவுவதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகிப் போனாலும் தீர்வு எட்டப்படவில்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர்ப்புற கடைவீதி பகுதிகளில், கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100க்கும்
மேற்பட்ட காளை மாடுகள் சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரியும் காளைகள் அடிக்கடி சாலைகளில் சண்டை போடுவதால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.30) நகரின் மையப் பகுதியில், நெடுஞ்சாலை நடுவே இரண்டு காளைகள் கண்மூடித்தனமாக ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு சண்டை போட்டன.
வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை முட்டி சேதப்படுத்தியது. இதனையடுத்து
கடைவீதிகளில் இருந்த வியாபாரிகள் மாட்டின் மீது தண்ணியை ஊற்றி சாந்தப்படுத்த
முயற்சி செய்தனர். இருப்பினும், மாடுகள் சாந்தப்படவில்லை தொடர்ந்து சண்டை
போட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கேஸ் சிலிண்டர் விநியோகிப்பாளர் மீது இரண்டு மாடுகளும் சண்டை போட்டு மோதியதில், அவர் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி தண்ணீர் கொடுத்தனர்.
திருப்புவனம் மற்றும் மானாமதுரை பகுதியில் இதுமாதிரி இரவு நேரத்தில் ரோட்டில்
மாடுகள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதும், சண்டை போட்டு கொள்வதும் வாடிக்கை ஆகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துகள் ஏற்பட்டு இதுவரை 100மேற்பட்டோர் காயம் ஏற்பட்டுள்ளதோடு, 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பலமுறை மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம் பேரூராட்சியில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.