#Telegram தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது!
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராங்கோ-ரஷ்ய கோடீஸ்வரரான 39 வயது பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் பயணம் செய்தார் அப்போது பாரிசுக்கு அருகே உள்ள பிரான்ஸ் போர்கெட் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனார் பாவெல் துரோவ் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இணையதளங்களில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக கூறி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டெலிகிராம் மெசேஜிங் செயலியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை பாவெல் துரோவ் தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துபாயை தளமாகக் கொண்ட டெலிகிராம், ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்த துரோவ் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் 2014 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறினார். சில எதிர்ப்புகள் காரணமாக அவர் தனது டெலிகிராம் செயலியை விற்பனை செய்தார். தற்போது டெலிகிராம் செயலியை நிர்வகித்து வரும் பாவெல் துரோவ், 15.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளார்.
டெலிகிராம் செயலி 900 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. பாவெல் துரோவ் கைது தொடர்பாக டெலிகிராம் உடனடியாக பதிலளிக்கவில்லை. இதேபோல் பிரெஞ்சு உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் பாரிஸில் தான் ஒரு தேடப்படும் நபர் என்பதை அறிந்து பாவெல் துரோவ் ஆச்சரியம் அடைந்ததாக ஃபிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.