#Telangana | தொழிலதிபரின் மகளுக்காக தங்கத்தால் நெய்யப்பட்ட சேலை - விலை இவ்வளவா?
தெலங்கானாவை சேர்ந்த நல்ல விஜய்குமார் எனும் நெசவாளர் 200 கிராம் தங்கத்தை பயன்படுத்தி 12 நாட்களில் சேலை ஒன்றை நெய்துள்ளார். இந்த படைப்பு ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறது.
தெலங்கானாவின் சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவுக் கலைஞரான நல்ல விஜய்குமார், முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன புடவையை நெய்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக இந்த தனித்துவமான படைப்பை செய்யச்சொல்லி கூறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட இந்த ஆர்டருக்கு, பல நுணுக்கமான வேலைப்பாடும், கவனமும் தேவை என நல்ல விஜய்குமார் தெரிவித்துள்ளார்.
சிர்சில்லா தெலுங்கானாவில் உள்ள நகரமாகும். இது திறமையான கைத்தறி நெசவாளர்களுக்கு புகழ் பெற்றது. நல்ல விஜய்குமார் அவர்களில் ஒருவர். இவர், தங்கத்தை நெசவு செய்ய நேர்த்தியான இழைகளாக மாற்றுவதற்கு சிறப்பு சிகிச்சை முறையும், துல்லியமும் தேவை என்றும், இதற்கு கணிசமான நேரம் எடுக்கும் என்றும் கூறினார். தங்க நூல் தயாரிக்கப்பட்டதும், சேலை 10 முதல் 12 நாட்களில் நெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சேலை 49 அங்குல அகலமும் ஐந்தரை மீட்டர் நீளமும் கொண்டது. இது 800 முதல் 900 கிராம் வரை எடை கொண்டது. மேலும், தோராயமாக 200 கிராம் தூய தங்கம் இந்த சேலை நெய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நேர்த்தியான படைப்பை உருவாக்குவதற்கான மொத்த செலவு 18 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்டர் கொடுத்த தொழிலதிபரின் மகளின் திருமண நாள் அக்டோபர் 17-ம் தேதி. அன்றைய நாள் தொழிலதிபரின் குடும்பத்தாருக்கு இந்த தங்க சேலை வழங்கப்படும்.
தனது கைவினையில் திருப்தி அடைந்த விஜய் குமார், "இதுபோன்ற தனித்துவமான சேலையை நெசவு செய்தது பெருமையாக உள்ளது. இந்த திட்டத்தை முடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், இந்தக் கலையின் மீதான எனது ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் கனவையும் நிறைவேற்றுகிறது" என்றார். இந்த படைப்பு தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.