தஞ்சை ஆணவக் கொலை - மேலும் 3 பேர் கைது...!
தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யா எரித்து ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெற்றோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞரும் அருகே உள்ள நெய்வவிடுதி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம் பெண்ணும் காதலித்துவந்துள்ளனர். நவீன் (19) பள்ளர் சாதியை சேர்ந்தவர். ஐஸ்வர்யா(19) கள்ளர் சாதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் விரும்பியுள்ளனர். இருவரின் குடும்பமும் ஏழை எளிய குடும்பம் தான். கடந்த 30ஆம் தேதி பல்லடம் அருகே உள்ள ஒரு கோயிலில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே வீடு எடுத்து தாங்கியும் உள்ளனர். அதனை what's app ல் பகிர்ந்துள்ளனர்.
இதனை ஐஸ்வர்யா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர். உறவினர்களும் ஊராரும் குடும்பத்தினரை அசிங்கப்படுத்தி பேசியுள்ளனர். அதன் பிறகுதான் ஐஸ்வர்யா குடும்பத்தினர் உறவினர்கள் தந்தையுடன் பல்லடம் சென்று கடந்த 3ஆம் தேதி காணவில்லை என புகார் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் இருந்த இடத்தை கண்டறிந்து பல்லடம் காவல்துறை ஆய்வாளர் முருகையா என்பவர் இருவரையும் பிரித்து பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். வீட்டிற்கு அழைத்து வந்தவர்கள் அன்று இரவே தூக்கில் தொங்கவிட்டு எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவை எரித்து அதன் அடையாளம் தெரியக் கூடாது என்று எரித்த சாம்பலையும் அள்ளிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 7ஆம் தேதி கணவர் நவீனுக்கு தெரியவரவே காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பின்பு தற்போது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆணவக்கொலைக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் முருகையா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை அனைவரையும் 24-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.