"காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் #TANGEDCO விளக்கம்!
மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக TANGEDCO தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்
நாளை வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டது. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி
பாலாஜி அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது, மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் தரப்பில், தமிழ்நாடு முழுவதும் மின் பகிர்மான கழகத்தில் கேங்மேன்களை மின் இணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதால், தகுதி இல்லாத இந்த பணிகளில் தங்களை பயன்படுத்துவதனால் மூன்று ஆண்டுகளில் மின் விபத்து ஏற்பட்டு 70 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள் : #IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இதையடுத்து மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை எப்போது
நிரப்புவீர்கள் என்பது குறித்து மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்குமாறு மின்வாரிய தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, காலிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுசம்பந்தமாக கேங்மேன் தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
இதையடுத்து, பேச்சு வார்த்தை முடியும் வரை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக
தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக அடிப்படையிலோ காலியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.