#ChennaiRains | பருவமழை முன்னெச்சரிக்கை - நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
சென்னையில் கனமழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை பகுதிகளில் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் எனவும், தொடர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (அக். 17) வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக். 14) நள்ளிரவு கனமழை பெய்தது.
இந்நிலையில், மழை தொடர்பாக முன்னேற்பாடுகளை கண்காணிப்பதற்காக பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : T20W | பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்!
அந்த பதிவில், "சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு செய்தோம். நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்.
நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம். மேலும், அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் – கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்.
சேப்பாக்கம், டிரிப்ளிகேன் தொகுதி, ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை நேரில் ஆய்வு செய்தோம். மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்"இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.