தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாத்தியக் கூறுகள் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மியான்மர் கடலோர பகுதியில் நிலவி வந்த காற்றின் சுழற்சியின் காரணமாக, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தடைபட்டது.
பின்னர் மியான்மர் பகுதியில் நிலவிய காற்று சுழற்சி வலுவிழந்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தின் கீழ், அதே பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்கள் கைது!
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.