Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம்" - வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

12:12 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம் என வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நடத்தினார்.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? அதை விரைந்து முடிக்க வேண்டும். வாய்க்கால் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படியுங்கள் : “70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!

இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

"வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுக்க முடியும். கடந்த 3 ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். மேலும் இது போன்ற கூட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என்ற 2 பருவ காலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் அதிகளவில் மழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழை முன்பெல்லாம் வருட முழுவதும் பரவலாக பெய்து வந்தது. சமீப காலமாக காலநிலை மாற்றத்தால் சில நாட்களிலேயே மொத்தமாக அல்லது ஒரு சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்த பருவமழையும் கொட்டி தீர்த்து விடுகிறது. இதை எதிர்கொள்வது தான் மிக மிக முக்கியமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களின் அவசிய தேவையான குடிநீர், சாலை, மின்சார உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தமிழ்நாடு அரசு திறம்பட எதிர்கொண்டதன் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் விரைவாக மீண்டு வந்தன. அனைத்து துறை அலுவலர்களும் களத்தில் இருந்தனர். பாதிப்பு ஏற்பட்டதே தெரியாத வகையில் உடனடியாக நிலைமைகளை சமாளித்தோம். அதே போல் இந்த ஆண்டும் பேரிடர் தாக்கத்தை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தலைமைச் செயலாளர் ஏற்கனவே செப்டம்பர் 14 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர்களிடம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார் அதன் மூலம் அறிவுரைகளையும் வழங்கினார். அனைத்தையும் அமைச்சர்கள், அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கை மூலம் பெரிய அளவிலான சேதங்களை தடுக்க முடியும்.

பேரிடர்களை எதிர்கொள்வதில் முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நம் அரசு அதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த தனி கவனத்தை செலுத்தி வருகிறது. வானிலை தரவுகளை உடனடியாக வழங்க கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசர கால சேவை மையம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. முன்பு இருந்த மையத்தை ஒப்பிடும்பொழுது தற்போது பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவோடு இந்த மையம் இயங்கி வருகிறது மேலும் பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைப்பு மையத்துடன் செயல்பட்டு வருகிறது.

பெய்த மழையின் அளவு எவ்வளவு என்பது பெய்யும் நேரத்தில் தெரிந்தால் தான் அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை வெள்ளம் முன்னெச்சரிப்பு தகவல்கள் உள்ளிட்ட பணிகளை சரியாக செய்ய முடியும். இதற்காக 1400 தானியங்கி மழை மாணிகளையும் 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நிற தகவல்களை பெற்ற வருகிறோம்.இந்த தகவல்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது கிடைத்தால் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

வானிலை முன்னெச்சரிக்கை தற்போதைய வானிலை பெறப்பட்ட மலை அளவு நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தமிழில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN ALERT என்று மொபைல் ஃபோன் செயலியை உருவாக்கியுள்ளது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். ஆழ் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல் கனமழை குறித்த தகவல்கள் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்த காலகட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும் நாட்டிற்கு முன்னுதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு வார்டு, தெருவாரியாக வெள்ள அபாய எச்சரிக்கையை வழங்க சென்னை நிகழ் நேர வெள்ள முன்னறிவிப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதியோர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க முன் கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது அவசியம். வெள்ளம் ஏற்படும் போது தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு முன் கூட்டியே வெளியேறி செல்வது முக்கியம். இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப்பணியாளர்களும் பொதுமக்களோடு இணைந்து அவருக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண முகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

வெள்ளம் ஏற்பட்டவுடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வளவு விரைவாக ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ப தேவையான நீர் இறைக்கும் இயந்திரம், மர அறுப்பான்கள், ஜேசிபி , படகுகள் போன்ற கருவிகள் தாழ்வான பகுதிகள் அருகில் முன்கூட்டியே நிறுத்த வேண்டும். பல்வேறு வெல்ல தடுப்பு பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே விரைவாக முடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் :“70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!

மாவட்டத்தை பற்றி நன்கு முழுமையாக தெரிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து உள்ளோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்கள் பணிகளை தொடங்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் ஆயத்தப் பணிகளை முறையாக நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிகள் மட்டும் இன்றி ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறு பாலங்கள் கழிவுகள் அகற்றுதல், நீர் நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிப்படுத்துதல் உள்ளிட்டவற்றையும் சரியாக நடைபெறுகிறதா என்றும் ஆய்வின்போது கண்டறிய வேண்டும்.

வெள்ள காலம் என்றாலே மாணவர்கள் ஆர்வத்துடன் ஏரி, குளம் போன்ற பகுதிகளுக்கு சென்று விளையாடுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். வெள்ளம் புயல் போன்ற பேரிடர்களில் தகவல் தொடர்பு மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகள் முடிந்த வரை தடையின்றி வழங்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர், பால், உணவு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வெள்ளத்தால் நோய் தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும்.

பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே தேடல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற முறையான செயல் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும். எந்த சவாலாக இருந்தாலும் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓர் அணியாக நின்றால் செயல்பட்டால் அதில் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் சாத்தியம் பருவ மழையால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் துயர துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://fb.watch/uW11YbXkiN
Tags :
CMOTamilNaduheavyrainsMKStalinNews7Tamilnews7TamilUpdatesTamilNaduTNRains
Advertisement
Next Article