பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சொந்த நிறுவனத்தை தொடங்குகிறாரா லீ ஜே வூக்? - காதலை உறுதிப்படுத்திய நிலையில் வெளியான புதிய தகவல்!
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
"பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.