NCERT வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களில் இந்தி திணிப்பு - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கண்டனம்!
புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக அரசு மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையில் தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு விவகாரத்தில் மொழிப் பிரச்னை வெடித்து வருகிறது. இந்த சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புடன் புத்தகங்கள் இடம்பெற்றது.
அதற்கு கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, ஆங்கில வழிப் புத்தகங்களுக்கு இந்தி பெயர்களை வழங்கும் கவுன்சிலின் முடிவு என்பது மத்திய அரசு கலாச்சாரத் திணிப்பு மற்றும் நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை நாசப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக தற்போது தமிழச்சி தங்கபாண்டியனின் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், என்.சி.ஈ.ஆர்.டி (NCERT) வெளியிடும் ஆங்கிலப் பாடப் புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இது ஒருமைபாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஆட்சிமொழிகள் சட்டத்திற்கும் எதிரானது. புறக்கடை வழியாக மேற்கொள்ள நினைக்கும் ஒவ்வொரு ‘இந்தித் திணிப்பு’ முயற்சிக்கும் சம்மட்டி அடி கொடுத்து அனுப்பியிருக்கிறது “திராவிட மண்” என்பதை வரலாறுகளின் வழியே நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது”
இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியனின் எம்.பி. தெரிவித்துள்ளார்.