தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினியின் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்ட தீவிர ரசிகர்!
மதுரை திருமங்கலத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடிகர் ரஜினிக்கு கோயில் போன்று செட் அமைத்து, அவரின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வருகிறார் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் (48). இவர் தற்போது திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராவார். திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தொழில் நடத்தி வரும் கார்த்திக், ரஜினிக்காக இரண்டு அறைகளை ஒதுக்கியுள்ளார். அந்த அறைகள் முழுவதும் ரஜினியுடைய உருவப்படங்கள் ஓட்டப்பட்டு, ரஜினி கோயில் என்ற பெயரில் கோபுர வடிவில் செட் அமைத்துள்ளார். கோயில் போன்று தோற்றமளிக்கும் அந்த அறையில் 250 கிலோ கருங்கல்லினால் ஆன ரஜினி சிலை ஒன்றை வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, ரஜினியின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கலிட்டு அவரது குடும்பத்தினர் வழிப்பட்டனர். மேலும் விரைவில் சொந்த நிலம் வாங்கி, அங்கு ரஜினிக்கு கோயில் கட்டி வழிபட உள்ளதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.