"தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்" | ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் 'மாயாவதி' கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக):
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங் இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயவதிக்கும், தொண்டர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
தொல் திருமாவளன் (விசிக):
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பவுத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கு. செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்):
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிா்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் இத்தகைய படுகொலைகள் நிகழ்த்தப்படுவது வேதனைக்குரியது. காவல்துறையினா் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக):
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல். முதல்வா் மு.க.ஸ்டாலின் இனியாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.