“மக்களே இலவசம் வேண்டாம் என்றால் தான் மாநிலத்தின் கடன் தீரும்” - சமக தலைவர் சரத்குமார்!
மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் தமிழ்நாடு கடன் தொல்லையில் இருந்து மீளும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
“தமிழ்நாட்டில் மட்டும் அல்ல தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும், போதை கலாச்சாரம் பெருகி உள்ளது. அதை காவல்துறை கண்காணித்து பெரும் புள்ளிகள் இருந்தாலும் தண்டனை வழங்கினால் தான் கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதன் பின்புறத்தில் பெரும்புள்ளிகள் இருந்தாலும் அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளது. 6 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 8.3 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது. இதை காண அச்சமாக உள்ளது. இதை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து இலவசங்களை வழங்கி கொண்டே இருக்கிறார்கள்.
மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை அரசு இலவசமாக வழங்கியதால் தான், கஜானா காலியாக உள்ளது. மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால்தான் கடன் தொல்லையில் இருந்து தமிழ்நாடு மீள முடியும். திமுக தவிர அதிமுக மற்றும் பாஜக கட்சி மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
மக்களே இலவசம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும்தான் இலவசம் வழங்க வேண்டும்”
இவ்வாறு சமக தலைவர் நடிகர் சரத்குமார் கூறினார்.