"மேகதாதுவில் அணை கட்டினால் அதிகம் பயன்பெறுவது தமிழ்நாடு தான்" - கர்நாடக துணை முதலமைச்சர் #DKShivakumar
மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாடு தான் அதிக பயன்பெறும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கி வரும் பயோ - சி.என்.ஜி., மையத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று பார்வையிட்டார். அப்போது டி.கே.சிவக்குமார் எரிவாயு உற்பத்தி முறையை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில், கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உமா சங்கர், பெங்களூரு மாநகர ஆணையாளர் துஷார் கிரி நாத், கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் செயலாளர் ராஜேந்திர சோழன், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சென்னையில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பார்வையிட வந்தேன். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவத்தை தருகிறது. எங்களுடைய திட்டங்களை மேம்படுத்த விரும்புகிறோம். நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சவாலானதாக இருந்தாலும், சென்னையின் மாடல் நன்றாக உள்ளது.
மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாடு தான் அதிக பயன்பெறும். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மழை கர்நாடகாவிற்கு அல்ல, தமிழ்நாட்டிற்கு தான் உதவி செய்திருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னுடைய நல்ல நண்பர். அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். இங்கு யார் இருக்கிறார்களோ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன்."
இவ்வாறு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.