“இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்பது நம் இலக்கு” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
“இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு என்பது நம் இலக்கு” என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11 நாட்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சுமார் 36 மாநிலங்களைச் சேர்ந்த 5500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இந்த கேலோ இந்தியா போட்டிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்க இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி , சுமார் 4 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே என் நேரு, துரைமுருகன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
அவரை தொடர்ந்து பேதிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ``எல்லோர்க்கும் எல்லாம்; அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட நமது திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் துறையின் தலைநகராக நிலைநிறுத்துவதும் நம் குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன். மணிப்பூர் பிரச்னையால் அங்குள்ள விளையாட்டு வீரர்களை சகோதர உணர்வோடு அழைத்து பயிற்சி கொடுத்தோம். அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா தொடரில் பங்கேற்கின்றனர் என்பது மகிழ்ச்சி 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ, அதேபோல விளையாட்டில் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை இடத்திற்கு கொண்டு செல்வதும் இலக்கு”. இவ்வாறு கூறினார்.