தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்?
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பிப்ரவரியில் கட்சி தொடங்கியதும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரோ என சந்தேகங்கள் எழுந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தொடங்கினார். முதற்கட்டமாக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே இலக்கு என முன்னதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : ரசிகர்களிடையே எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!
இந்நிலையில் இன்று அந்த செயலி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான அணியை நியமித்து நேற்று (மார்ச் 7) தமிழக வெற்ற்பிக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அந்த நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டமும், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் முதல் உறுப்பினராக, கட்சியின் தலைவர் விஜய் இணைய உள்ளதாகவும், கட்சியில் விஜய் இணையும் போட்டோ அல்லது வீடியோவை, இந்த கூட்டத்தில் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.