“தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,
“இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025 திட்டத்திற்கு இன்று அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதுதான் இதன் முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் விண்வெளித் துறைக்கான தகுதியான திறமையான நபர்களை உருவாக்குதல் ஆகிய 3 இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது”. என தெரிவித்தார்.