“மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” - சீமான் பேட்டி!
சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது,
“மதுவை ஒழிக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு என்ற விசிகவின் கோரிக்கை மிகச் சரியானது. மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. இந்தியாவில் அதிக நிதி வருவாய் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம். தேசிய அளவில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என அமைச்சர் ரகுபதி கூறியது ஏற்புடையதல்ல. எந்த கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தான் செய்ய முடியும் என்று மாற்றி விடுவது எல்லாம் ஏற்க முடியாது.
தாய்மொழி அழிந்துவிடும் என ஹிந்தி திணிப்பை முதலில் எதிர்த்தது தமிழ்நாடு தான். GSTயை அதிகம் எதிர்த்தது தமிழ்நாடு தான். நீட் தேர்விற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது தமிழ்நாட்டில் தான். அதுபோல மது ஒழிப்பிற்கும் முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத்தில் மதுவை ஒழித்தது போல் தமிழ்நாட்டிலும் ஒழிக்க வேண்டும். மத்திய அரசு தான் மதுஒழிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால், மாநில அரசின் உரிமை எதற்கு?
மதுக்கடைகளை திறந்தது நீங்கள். அதை மூடுவதில் என்ன பிரச்னை? அடுத்த காந்தி ஜெயந்தியில் மதுக்கடைகளை மூடுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு கூறினார். அவர் சொன்ன பிறகு எத்தனையோ காந்தி ஜெயந்தியை கொண்டாடி விட்டோம்”
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.