"வேளாண் வருவாயில் தமிழ்நாடு 22-ஆம் இடம்" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் மிகக்குறைந்த லாபமே கிடைப்பதாலும், தமிழகத்தில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாலும் தமிழக விவசாயிகளின் வருவாய் மிகவும் குறைந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள உழவர்களைக் காப்பாற்ற திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய திமுக அரசு, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் நெல்லுக்கு மிகக்குறைந்த கொள்முதல் விலையை வழங்குவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 1970 ஆம் ஆண்டின் அளவான 9.37 கோடி ஏக்கரில் இருந்து 2024 ஆம் ஆண்டில் 11.92 கோடி ஏக்கர்களாக அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு இதே காலத்தில் 66.75 லட்சம் ஏக்கரில் இருந்து 47.25 லட்சம் ஏக்கராக, அதாவது கிட்டத்தட்ட 20 லட்சம் ஏக்கர் குறைந்து விட்டதாக மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவலத்திற்கு காரணம் தமிழக ஆட்சியாளர்களைத் தவிர வேறு எவருமில்லை.
தமிழகத்தின் நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கு முழு முதல் காரணம் நெல் சாகுபடி லாபம் தராதது தான்.1974ஆம் ஆண்டில் தொடங்கி 2021 வரையிலான 47 ஆண்டுகளில் 15 ஆண்டுகளில் மட்டும் தான் தமிழக உழவர்களுக்கு நெல் சாகுபடியில் லாபம் கிடைத்துள்ளது. அதிலும் 2000-ஆம் ஆண்டுக்கு பிந்தைய 21 ஆண்டுகளில் வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே லாபகரமானவையாக அமைந்துள்ளன. அதே நேரத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகள் அனைத்து ஆண்டுகளிலும் லாபம் ஈட்டியுள்ளனர். லாபத்தின் அள்வும் கூட தமிழக உழவர்களுக்கு குறைவாகவே கிடைத்துள்ளது. பஞ்சாப் உழவர்களுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.42ஆயிரத்து 686 லாபம் கிடைக்கும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 109 மட்டுமே லாபமாக கிடைத்துள்ளது. இது பஞ்சாப் உழவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஆறில் ஒரு பங்கு தான்.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த உழவர்களின் வருமானம் பெருமளவில் குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் சராசரி மாதம் வருமானம் ரூ. 2129 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவு குறைந்த வருவாய் மட்டுமே கிடைப்பதால் வேளாண் வருமானத்தில் தமிழகம் 22ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு லாபம் குறைவாக கிடைப்பதற்கு விளைச்சல் குறைவாக கிடைப்பது காரணமா? என்றால் அது தான் இல்லை. தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 33.66 குவிண்டால் நெல் கிடைக்கிறது. இந்தியாவில் பஞ்சாவுக்கு அடுத்தபடியாக அதிக நெல் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். அதனால், லாபம் குறைந்ததற்கு அது காரணமில்லை. மாறாக, நெல் கொள்முதல் விலை குறைவாக இருப்பதும் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதும் தான் தமிழக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காததற்கு காரணமாகும்.
ஒதிஷா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய ரூ.71ஆயிரத்து 291 முதல் ரூ.74,657 மட்டுமே செலவாகும் நிலையில், தமிழ்நாட்டில் அதைவிட 20% அதிகமாக ரூ.88 ஆயிரத்து 380 செலவாகிறது. அதேநேரத்தில், தமிழகத்தில் பிற மாநிலங்களை விட கொள்முதல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. ஒடிசாவில் ரூ.3169, ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.2869 வீதம் ஒரு குவிண்டால் நெல்லுக்கு கொள்முதல் விலை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ.2500 மட்டும் தான் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மிகவும் குறைவாகவே நெல் வாங்கப்படுகிறது.
2023&24ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 5.245 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 4.52% மட்டும் தான். அதேநேரத்தில் பஞ்சாபிலிருந்து 23.62%, தெலங்கானா 12.15%, சத்தீஸ்கர் 15.80%, ஒடிசா 9.17% நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியாரிடம் விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு குறைந்த தொகையே கிடைப்பதும் தமிழக உழவர்களுக்கு போதிய வருவாய் கிடைக்காததற்கு காரணம். இதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதியை நடப்பாண்டில் நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை ஆகும். 2021ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த கொள்முதல் விலையை விட திமுக வாக்குறுதி அளித்த கொள்முதல் விலை 32.42% அதிகம் ஆகும். அதே அளவீட்டைக் கொண்டு பார்த்தால் இப்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3311 வழங்க வேண்டும். அதற்கு மாறாக வெறும் ரூ.2500 மட்டுமே கொள்முதல் விலை வழங்குவது உழவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. இது உழவர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.
தமிழ்நாட்டில் உழவர்களின் முதல் எதிரி யார்? என்றால் அது திமுக அரசு தான். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட, உழவர்களின் நலனுக்காக ஆகப்பூர்வமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நெல்லுக்கு உரிய கொள்முதல் விலையை வழங்க தயாராக இல்லை. உழவர்களுக்கு முதலீட்டு மானியம் வழங்கவும் தயாராக இல்லை. மாறாக, உழவர்களுக்கு துரோகம் செய்வதையும், ஏமாற்றுவதையும் தான் திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக உழவர்களின் உழைப்பையும், ரத்தத்தையும் உறிஞ்சும் திமுக அரசுக்கு அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவர். அது திமுகவுக்கு மறக்க முடியாத பாடமாக இருக்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.