Startup நிறுவனங்களின் செயல்திறனில் தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
Startup நிறுவனங்களின் செயல்திறனில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஸ்டார்ட்-அப் விருதுகள் மற்றும் மாநில தரவரிசை விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இது மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் (DPIIT) நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது...
“ டந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் தமிழ்நாடு இருந்தது. நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் , அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்! “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.