"தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது, நிதியும் கிடைத்துள்ளது!" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது நிதியும் கிடைத்துள்ளது என தென்சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சமந்தாவின் பிறந்தநாள்! புதிய திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு!
இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தென்சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலுங்கானா சென்றார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது. நிதியும் கிடைத்துள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"தெலுங்கானா மக்கள் மீது நான் பெரும் நம்பிக்கை வைத்துள்ளேன். அவர்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் தெலுங்கானாவில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு நீதியும் கிடைத்துள்ளது. நிதியும் கிடைத்துள்ளது. வி.பி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை அவர்கள் ஆண்ட போது கொண்டு வந்த திட்டங்களை விட பல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
மதுரை, திருநெல்வேலியில் 300 கோடி செலவில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு மருத்துவ உதவி சொல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.வறட்சி நிவாரணமாக இருந்தாலும்,வெள்ள நிவாரணமாக இருந்தாலும் கொடுப்பதற்கு கணக்கீடு உள்ளது. அதன்படி பிரதமர் நிவாரணம் வழங்கியுள்ளார்.
சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்படுத்துவது வழக்கமாக வருகிறது. தென் சென்னை பகுதியில் பெண்கள் கஞ்சா பழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர். மறுவாழ்வு மையங்கள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.பாஜகவின் வெற்றி களிப்போடு தெலுங்கானா சென்று கொண்டிருக்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.