தமிழ்நாட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு 526 மெகாவாட் மின்சாரம் உறுதி... புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம்!
526 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (14.02.2025) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடாகவிலுள்ள கைகா அணுமின் நிலையத்திடமிருந்து 196 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டிற்கு 526 மெகாவாட் மின்சாரம் வரும் 15 ஆண்டுகளுக்கு தடையின்றி கிடைக்கும். தமிழ்நாட்டில் பெருகி வரும் மின் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்ய இந்த மின் கொள்முதல் ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மின் வாரிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தமிழ்நாடு கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் பி. வினோத்குமார், கர்நாடக மாநிலம், கைகா அணுமின் நிலைய இயக்குநர் சேஷய்யா முப்பராஜி மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் அ. ரா மாஸ்கர்னஸ் இடையே பரிமாறி கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.