அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சி மற்றும் 'டி' பிரிவை (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். அதேபோல், தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2022-2023-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
"சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மூலம், தமிழக அரசுக்கு 167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொங்கல் பரிசாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு இந்த தொகை கிடைக்காது என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.