தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழா: சிறந்த படம், வில்லன் என 6 விருதுகளை பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படம்...
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படத்துக்கான முதல் பரிசு, கதையாசிரியர் விருது, வில்லன் நடிகருக்கான விருது உள்பட6 விருதுகள் ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அதேபோல் சிறந்த கதையாசிரியர் விருது மோகன் ராஜாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ராம்ஜி (தனி ஒருவன்) க்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் விருது ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன் (தாக்கதாக்க) ஆகிய இருவருக்கும், சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) விருது கோபி கிருஷ்ணாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட்டைரக்டர்) விருது பிரபாகரன் (பசங்க 2) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த வில்லன் நடிகருக்கான விருது ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்காக அரவிந்த்சாமிக்கும், சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது ரமேஷ் (உத்தம வில்லன்), சிறந்த நடன ஆசிரியர் விருது பிருந்தாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருது சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று), சிறந்த தையற் கலைஞர் விருது வாசுகி பாஸ்கர் (மாயா) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.