தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ஆர்.மாதவனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக ஜோதிகாவிற்கும், சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்காக கௌதம் கார்த்திக்கும், சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்பட்டது.
அதேபோல், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்திற்காக சிங்கம்புலிக்கும், சிறந்த நகைச்சுவை நடிகை விருது ‘திருட்டுக் கல்யாணம்’ மற்றும் ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக தேவதர்ஷினிக்கும், சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ‘அபூர்வமகான்’ திரைப்படத்திற்காக தலைவாசல் விஜய்க்கும், சிறந்த குணச்சித்திர நடிகை விருது ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக கௌதமிக்கும் வழங்கப்பட்டது.